அனைத்து பருவத்திலும் வளரும் அற்புதமான நெல் ரகம்!

9 hours ago 3

மழை, வெயில், புயல், வெள்ளம் என எந்த விதமான இயற்கை சீற்றங்கள் வந்தாலும் சிறிய பாதிப்பு கூட இல்லாமல், அனைத்து சூழலையும் தாங்கி வளர்ந்து பயன்தரும் வகையில் நம் முன்னோர்கள் பலவிதமான நெற்பயிர்களைப் பயிரிட்டு வந்தார்கள். நாளடைவில் இத்தகைய பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள் அருகி, குறுகிய நாட்களில் குறைந்த உயரத்தில் விளையும் நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. இவை சாதாரண மழை பெய்தால் கூட, அதைத் தாங்க முடியாமல் நிலத்தில் சாய்ந்து, அழுகியும் பாதிப்பைக் கண்டன. இதனால் செலவு செய்து பயிர் செய்த விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது நமது பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு பல விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு பரவலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றுதான் சூலைக்குறுவை.
சூலைக்குறுவை நெல் விதைகளை நேரடியாக நிலத்தில் தூவி வளர்க்கலாம். 10 சென்ட் நிலத்தில் விதை நெல்லைத் தூவி அரை அடி வளர விடலாம். இந்த நாற்றுகளை எடுத்து நிலத்தில் நடவு செய்தும் வளர்க்கலாம். செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய உள்ள பின் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்ய உகந்தது. நாகை மாவட்டத்தில் உள்ள செம்பொடை, பெரிய குத்தகை, தோப்புத்துரை போன்ற பகுதிகளிலும், கரையோர கிராமங்களிலும் அமோகமாக விளையக்கூடிய நெல் ரகம். எந்த விதமான பருவ நிலையையும் தாங்கி வளரும் இயல்பு கொண்டது. எல்லா விதமான நிலத்திலும் வளரக்கூடியதாகவும் இருக்கிறது இந்த சூலைக்குறுவை.

எனவே தமிழகம் முழுதுமே இதைப் பயிரிடலாம். களிகலப்பு மண்ணில் சிறப்பாக வளரும். அதேசமயம் நன்செய் நிலமான பாசனமுறைப் பகுதியிலும் புன்செய் நிலமான மானாவாரி நிலத்திலும் நன்கு வளரக்கூடியது. முறையாக விதை நேர்த்தி செய்து, பாத்தி அமைத்து நாற்றங்கால் உருவாக்கி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ வரை விதை நெல் தேவைப்படும். விதையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வடிகட்டி ஒருநாள் நிழலில் வைக்க வேண்டும். பிறகு முளை கட்டிய விதையை சீராக தூவி விடவேண்டும். நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணைத் தூவிய பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிக வெயிலில் இருந்து நாற்றைப் பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலம் மூடி வைப்பது நல்லது. இவ்வாறு நாற்றங்காலில் வளர்க்கும்போது 14 முதல் 15 நாட்களில் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் நாற்றுகள் வளர்ந்து நிற்கும்.

நாற்றுகளை நடவு செய்வதற்கு நிலத்தை நன்றாக தயார் செய்துகொள்ள வேண்டும். நிலத்தில் நன்கு தண்ணீர் விட்டு நான்கு உழவு ஓட்டி சமப்படுத்திய பிறகு நாற்றுகளை நடவு செய்யலாம். தற்போது எப்படி மாட்டு எரு பயன்படுத்தப்பட்டு வருகிறதோ, அதைவிட பல மடங்கு அளவில் பன்றி எருதான் முற்காலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. காய்ந்த நிலையில் உள்ள பன்றி எருவை நிலத்தில் தூவி விட்டால் மண்புழுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். மண்புழுக்களின் கழிவுகள் நிலத்திற்கு நேரடி உரமாக மாறும். இதோடு சேர்த்து சூலைக்குறுவை நாற்றுகளை நடவு செய்யும்போது ஏக்கருக்கு 50 கிலோ கடலைப் புண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரம் இட வேண்டும். நடவு செய்த 15வது நாளில் இரண்டாவது மேலுரம் போட வேண்டும். இதன் மூலம் நாற்றுகள் நல்ல ஊட்டத்துடன் வளரும். நிலமும் எப்போதும் இறுகாமல் பொலபொலப்பாக இருக்கும்.
பூச்சி பாதிப்புகள் அதிகம் இருந்தால் பஞ்சகவ்யம், வேப்பம் புண்ணாக்கு, மீன் எண்ணெய் போன்ற இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தலாம். முறையாக களை நீக்கம் செய்ய வேண்டும். நிலத்திற்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சி வந்தால் சூலைக்குறுவை பொன்னாய் விளையும். 110 நாளில் நெற்பயிர் அறுவடைக்குத் தயாராகும். குறுகிய காலப் பயிர் என்பதால் நம்பி இதை விதைக்கலாம். ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சமாக 1500 கிலோ வரை நெல் மகசூல் கிடைக்கும். இதை அரைத்து எடுத்தால் 800 கிலோ வரை அரிசி கிடைக்கும். சூலைக்குறுவையின் நெல்மணி தடித்தும், வெளிறிய மங்கலான பழுப்பு நிறத்துடனும் காணப்படும். விரைவில் செரிமானம் ஆகக்கூடிய சூலைக்குறுவை அரிசி வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

*விரைவில் செரிமானம் ஆகக்கூடிய சூலைக்குறுவை அரிசி வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

The post அனைத்து பருவத்திலும் வளரும் அற்புதமான நெல் ரகம்! appeared first on Dinakaran.

Read Entire Article