அனைத்து தொகுதிகளிலும் 3 மாதங்களுக்குள் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

3 months ago 14

சென்னை: என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக இளைஞர் அணிக்கு சட்டமன்ற தொகுதிகள் தோறும், 234 சட்டமன்ற தொகுதிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்க வேண்டும். அதுமட்டுமல்ல என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டியை நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்.

இதுவரை தமிழகம் முழுவதும் 75 தொகுதிகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை திறந்து விடுவோம் என்ற உறுதியை தலைவருக்கு நான் அளிக்கிறேன்.  நம்முடைய திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. சரியான பேச்சாளர்களை கண்டுபிடித்து தலைவரிடம் ஒப்படைக்கிறோம் என்ற மனநிறைவும், பெருமிதமும் எனக்கு இப்போது இருக்கிறது.

பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஆனால் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு அளிக்க முடியும். முதல் பரிசை பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோக நிதி, 2ம் பரிசை பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவரஞ்சனி, 3வது பரிசை பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா ஆகிய 3 பேருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த போட்டியை பொறுத்தவரையில் என்ன சிறப்பு என்றால், ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் பங்கேற்று இருக்கிறார்கள். இங்கு உள்ள அனைத்து பேச்சாளர்களும் இடி மின்னல் மழை போன்று உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post அனைத்து தொகுதிகளிலும் 3 மாதங்களுக்குள் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article