அனைத்து கட்சிகளும் போற்றி தான் ஆக வேண்டும் அம்பேத்கரை யார் அவமதித்தாலும் ஏற்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

4 weeks ago 6

திண்டிவனம், டிச. 20: அம்பேத்கரை யார் அவமதித்தாலும் ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அமித்ஷா தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தான் பேசியதில் ஒரு பகுதி மட்டும் கேட்டு எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும் அம்பேத்கர் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவர் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவரை யார் தவறாக பேசினாலும் பாமகவினர் அமைதியாக இருக்க மாட்டோம்.

மழை, வெள்ள நிவாரண நிதி கேட்டு அனைத்து கட்சிக்குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி வைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து 10 நாட்கள் கடந்தபோதும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்கவில்லை. அதாவது ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியாக ₹946 கோடி செலவிடப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிக்குழு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

ஏக்கருக்கு ₹30 ஆயிரம் செலவாகும் நிலையில் ₹6,800 கொடுப்பதை ஏற்க முடியாது. ஏக்கருக்கு ₹40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ் கட்டாயப் பாடம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை.

இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியுறுத்தவில்லை. தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் கௌரவ பேராசிரியர்களுக்கு ₹25 ஆயிரம் போதுமானதல்ல. அவர்களுக்கு ₹50 ஆயிரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பாமக ஏற்காது. அம்பேத்கரை அமித்‌ஷா அவமதித்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றி தான் ஆக வேண்டும். அவரை கொச்சைபடுத்துவதையோ, அவமதிப்பதையோ ஏற்க முடியாது. ஒரே நாளில் 7அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மதுவிலக்கு என்ற துறையை வைத்து கொண்டு மது விற்பனையை அதிகரிக்கின்றனர். மதுவிலக்கு துறையை எடுத்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அனைத்து கட்சிகளும் போற்றி தான் ஆக வேண்டும் அம்பேத்கரை யார் அவமதித்தாலும் ஏற்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article