*ஒப்பந்தப்படி சிமெண்ட் ஆலைக்கு அனுப்பாமல் அட்டூழியம்
குமாரபாளையம் : சிமெண்ட் ஆலைக்கு அனுப்பாமல் பைபாஸ் ரோட்டில் சாய கழிவுகளை கொட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. சாயக்கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ள சாயச்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சாயத்தொழில் செய்வதற்கான உரிமையினை வழங்கியுள்ளது. இத்தகைய ஆலைகளில் சாயக்கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, நீரை தேக்கி உப்பை பிரித்து, மீண்டும் தண்ணீரை மறு உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இறுதி நிலையில் உள்ள திடக்கழிவுகளை உலர வைத்து, அருகில் உள்ள சிமெண்ட் ஆலைகளுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தப்படி அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான ஆவணங்களை அனுமதி பெற்ற சாயச்சாலைகள் பராமரித்து, மாசு கட்டுப்பாட்டு துறையின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், சாயச்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பெறப்பட்டுள்ள அனுமதிக்கும், கொஞ்சமும் பொருத்தமில்லாத நிலையில்தான் இந்த சாய ஆலைகள் இயங்குகின்றன.
அதன்படி, 25 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க அனுமதி பெற்ற நிலையில், அங்கு 5 லட்சம் லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில்தான், உரிமம் பெற்ற சாயச்சாலைகளின் நடைமுறை செயல்பாடுகள் உள்ளன.
பெறப்பட்டுள்ள அனுமதியை விட, அதிகளவில் உலர்ந்த நிலையில் உள்ள சாயக்கழிவுகளை சிமெண்ட் ஆலைக்கு அனுப்பினால், ஆலையிலிருந்து வழங்கப்படும் ஆவணங்கள், உண்மையான கழிவுநீரின் அளவை காட்டி விடும். இதனால் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது போக, மீதமுள்ள திடக்கழிவுகளை குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில், மூட்டைகளாக கட்டி லாரிகளில் ஏற்றி கொட்டி விட்டுச்செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த கழிவுகள் வெயிலில் உலர்ந்து, பொடியாக காற்றில் கலந்து பரவி சுற்றுச்சூழலை கெடுத்து வருகின்றன. மழை நேரத்தில் கரைந்து ஓடைகளையும், நீர்நிலைகளையும் மாசுபடுத்தி வருகின்றன. அவ்வப்போது நடைபெற்று வந்த இந்த சம்பவம், தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.
ஈ.காட்டூர் பொதுப்பணித்துறை கால்வாய், அருவங்காடு பைபாஸ் பகுதிகளில், இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்காவிட்டால், சாலையும், கால்வாயும் கழிவுகளின் குவியலாகி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
The post அனுமதித்ததை விட அதிகமாக சுத்திகரிப்பு செய்வதால் கழிவுகளை சாலையோரம் கொட்டும் சாயச்சாலைகள் appeared first on Dinakaran.