சென்னை,
வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது.
இதையடுத்து தாழ்வு மண்டலம் கடல் பகுதியில் இருக்கும் போதே, சென்னையில் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஏற்கனவே கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது. அப்போது மழையும் இல்லை; பலத்த காற்றும் இல்லை.
இந்த நிலையில், வடக்கு அந்தமான் கடற்பகுதியில் 22-ம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் மிதமான மழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.