பாகிஸ்தானுக்கு இந்தியா 7-வது முறையாக பதிலடி; இதற்கு முன்பு நடந்தது என்ன?

16 hours ago 3

புதுடெல்லி,

கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை கையாண்டது. சிந்து நதிநீரை நிறுத்தியது. தொடர்ந்து, ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் தபால் சேவையை நிறுத்தியது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில், 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய கோட்டையான பஹாவல்பூத் மீதான தாக்குதலில், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி, மைத்துனர் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அடுத்த குறி என்ன? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மோதல்களை பற்றி சற்று திரும்பி பார்ப்போம்.1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அப்போதைய சமஸ்தானமாக இருந்த ஜம்மு - காஷ்மீர் மீது இந்தியா - பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடின. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடி போராளிகள் சமஸ்தானத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். ஆனால், மகாராஜா ஹரி சிங் ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். இதனால், ஜம்மு - காஷ்மீர் எல்லைக்கு இந்தியா பாதுகாப்பு படையை அனுப்பியது. இதுவே, இந்தியா - பாகிஸ்தான் இடையே முதல் முறையாக மோதல் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த போர் 1949-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஐ.நா. தலையிட்ட பிறகே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதன்பிறகு 1965-ம் ஆண்டு உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக மாறுவேடமிட்டு வந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது 'ஆபரேஷன் ஜிப்ரால்டர்' மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போதைய போர் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் செப்டம்பர் 23-ந் தேதி வரை நடந்தது. அமெரிக்கா, சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) மத்தியஸ்தம் செய்த பிறகு போர் முடிவுக்கு வந்தது.

1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது, இந்தியா வங்காள சேதத்துக்கு ஆதரவாக கரம் கோர்த்து நின்றது. அப்போதைய போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. டிசம்பர் மாதம் 16-ந் தேதி ஆயுதங்களுடன் பாகிஸ்தான் படைகள் சரண் அடைந்தன. இந்த போர் வங்காளதேசத்தை ஒரு சுதந்திர நாடாக்கியது.அதன்பிறகு, 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த சிகரங்களை மீட்க நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.

பின்னர், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகே இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. இதில், ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி நடந்த புல்வாமா தாக்குதல். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தி முகாமை அழித்தது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு பிறகு இந்தியா நடத்திய முதல் வான்வழித் தாக்குதல் இதுதான். அதேபோன்ற ஒரு தாக்குதலைத்தான் இந்தியா இப்போது 7-வது முறையாக 'ஆபரேசன் சிந்தூர்' மூலம் நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

Read Entire Article