
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, இன்று (7.5.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மற்றும் அனைத்து பொதுமக்களுக்கு இன்றியமையாத பொதுப் போக்குவரத்துச் சேவைகளை, எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.
பொது மக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல், பணிச்சுமையை குறைக்கும் விதமாக நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தல், பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த சேவைகளால், மகளிர், மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள், திருநங்கைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், மூத்த குடிமக்கள் மற்றும் குறிப்பிட்ட இதர பிரிவினருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட "மகளிர் விடியல் பயணம் திட்டம்" மூலம் 684 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 3,727 புதிய பேருந்துகளும், 1,500 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இன்று (7.5.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 27 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 114 புதிய பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 31 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 14 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 புதிய பேருந்துகளும் என மொத்தம் 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 214 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பினை பெற்ற "மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக" 70 நகரப் பேருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேருந்துகளின் சேவைகளை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர், பேருந்தில் ஏறி பேருந்தினை பார்வையிட்ட பிறகு, விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன் பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமோழி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.