அந்த பாக்.வீரர் ஒன்றும் எனது நெருங்கிய நண்பர் கிடையாது - நீரஜ் சோப்ரா

9 hours ago 2

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.

இருப்பினும் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்தார். வரும் 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்தார்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய சூழலில் பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்ததை கேள்விப்பட்ட சிலர் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் அதிருப்திக்குள்ளான நீரஜ் சோப்ரா அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அர்ஷத் நதீமுடனான தனது உறவு குறித்து நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் அர்ஷத் நதீமுடன் எனக்கு மிகவும் வலுவான உறவு கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உலகம் முழுவதும் உள்ள தடகள சமூகத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். ஆனால் யாராவது என்னிடம் மரியாதையுடன் பேசினால், நான் எப்போதும் அவர்களுடன் மரியாதையுடன் பேச விரும்புகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச்சிறிய சமூகம்.

எல்லோரும் தங்கள் நாட்டிற்காக போட்டியிடுகிறார்கள். எல்லோரும் நாட்டிற்காக தங்கள் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறார்கள். நானும் அர்ஷத் நதீமும் ஒருபோதும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக இதற்கு மேல் இருவர் இடையிலான உறவு முன்பு போல் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். 

Read Entire Article