
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் சவுதிரி அன்வருல் ஹுக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப்பின் மக்கள் உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலம் பள்ளத்தாக்கு உள்பட எல்லைப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதப்பள்ளிக்கூடங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் உள்ள சாலைகள் தொடர்ந்து திறந்து இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.