![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38804994-azaru.webp)
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடர் நிறைவடைந்தவுடன் இந்தியா 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்பு வரை இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து நிறைய விமர்சனங்கள் நிலவின. ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் அதிரடியாக சதமடித்து பதிலடி கொடுத்தார். அத்துடன் அந்த போட்டியில் சில சாதனைகளையும் படைத்தார்.
இந்நிலையில் துபாயில் இதே போல ரோகித் பேட்டிங்கில் அசத்தினால் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும் என்று முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய முடிவே தவிர யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அசாருதீன் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ரோகித் சர்மாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அசத்தும் நாம் கோப்பையை வெல்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சரியான நேரத்தில் அவருடைய பார்ம் வந்துள்ளது. அவர் நேற்று நன்றாக விளையாடி சாதனைகளை முறியடித்ததாக கேள்விப்பட்டேன். அதற்காக அவரை வாழ்த்துகிறேன்.
ஓய்வு என்பது ரோகித் சர்மா தீர்மானிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் வீரருக்குத்தான் தன்னுடைய ஆட்டம் மற்றும் ஆர்வம் எந்தளவுக்கு இருக்கிறது என்று தெரியும்" என கூறினார்.