அதிர்ச்சியளித்த விபத்துகள்

3 months ago 23

சென்னை,

கடந்த ஆயுதபூஜையன்று தமிழ்நாட்டில் நடந்த இரு விபத்துகள் எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மாலை 5.40 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 144 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர். விமானத்தின் டேக்-ஆப் மிகவும் சுமுகமாக நடந்தது. ஆனால் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் விமானிகள் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று உணர்ந்தனர். உடனே விமானத்தில் உள்ள மானிட்டரைப் பார்த்தனர். விமானத்தின் சக்கரங்கள் பறக்கத் தொடங்கியவுடன் வழக்கமாக உள்வாங்கியிருக்க வேண்டியநிலை ஏற்படாமல் அப்படியே இருப்பதை கண்டுபிடித்தனர்.

இப்படியே தொடர்ந்து இயக்கப்பட்டால் ஆபத்து என்று முடிவெடுத்த விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து உடனடியாக தகவல் கொடுத்தனர். விமானத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கத்தேவையான பெட்ரோல் இருந்ததால், தரையிறக்கும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதி, அதை காலிசெய்துவிட்டு தரை இறக்க முடிவு செய்தனர். அதன்படி, விமானம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சுற்றிச்சுற்றி பறந்து கொண்டேயிருந்தது. 26 முறை அவ்வாறு சுற்றிச்சுற்றி பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் இருந்த பயணிகளெல்லாம் பயத்தில் தவித்து போனார்கள். ஏறத்தாழ 3 மணி நேரம் வானில் வட்டமிட்டு பறந்து எரிபொருளை செலவழித்த பிறகு விமானிகள் விமானத்தை பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இறக்கினர். பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பயணிகளும் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.

சக்கரங்கள் உள்வாங்காமல் போனதற்கு காரணம், விமான நிலைய ஊழியர்கள் கடமையிலிருந்து தவறியதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு சக்கரங்களில் உள்ள பின்னை அன்லாக் செய்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநாளில் மைசூருவில் இருந்து பீகாரின் தர்பங்காவுக்கு சென்னை வழியாக செல்லும் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் 22 ரெயில் பெட்டிகள் இருந்தன. 1,600 பயணிகளும் இருந்தனர். பொன்னேரி ரெயில் நிலையத்தில் மெயின் லைனில் போக 'பச்சை விளக்கு' போடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ரெயில் நிலையமான கவரைப்பேட்டைக்குள் செல்லும்போது மெயின் லைனில் செல்லாமல் ரெயில் லூப் லைனில் செல்லத் தொடங்கியது. அப்போது ரெயில் 75 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது மட்டுமல்லாமல், லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இதனால் 13 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. சில ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன. அந்த சம்பவம் நடக்கும்போது இரவு 8.27 மணி. 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மெயின் லைனில் போக சிக்னல் போட்டுவிட்டு ரெயில் ஏன் லூப் லைனுக்குள் சென்றது?. ஊழியர்கள் தவறா?, தொழில்நுட்ப கோளாறா?, நாச வேலையா? என்பது குறித்து விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும். இதுபோல சம்பவங்கள் இனியும் நடக்கக்கூடாது. அனைத்து ரெயில்களிலும் 'கவாச்' கருவி பொருத்தப்பட்டால் இதுபோல சம்பவங்களில் ரெயில் தானாகவே நின்றுவிடும். எனவே எவ்வளவு செலவானாலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களிலும் 'கவாச்' கருவிகள் பொருத்தப்பட வேண்டும். விமான விபத்து என்றாலும் சரி, ரெயில் விபத்து என்றாலும் சரி தவிர்க்கக்கூடிய விபத்துகள் என்பதால் இத்தகைய கோளாறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Read Entire Article