
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின வாலிபரான ராகுல் அஞ்சால் (வயது 21), பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 8-ந்தேதி காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார்.
அதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் ராகுலை பிடித்து நிர்வாணப்படுத்தி கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் உறவினர்களை அழைத்து செருப்பு, கேபிள் மற்றும் பைப்புகளை கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மறுநாளும் அந்த வாலிபரை மீண்டும் நிர்வாணப்படுத்தி தெருவில் வைத்து அடித்து உதைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவங்களின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தாமாக முன்வந்து விசாரித்த போலீசார், வாலிபரின் சமூக தலைவரை அழைத்து பேசினர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை நிர்வாணப்படுத்தி தாக்கியது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியல் இன வாலிபரை நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சக்தி காவல் கண்காணிப்பாளர் அங்கிதா சர்மா கூறுகையில், "இந்த தாக்குதல் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியான பிறகு, போலீசார் இந்த விஷயத்தை அறிந்து கொண்டு, அந்த சமூகத்தின் தலைவர்களை (அந்த நபர் சேர்ந்தவர்) அழைத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்" என்று கூறினார்.