அதிர்ச்சி சம்பவம்: வக்பு சட்டத்தை ஆதரித்த பா.ஜ.க. தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு

1 month ago 11

இம்பால்,

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்ட மசோதாவை ஆதரித்ததற்காக மணிப்பூர் மாநில பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அஸ்கர் அலியின் வீடு ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அஸ்கர் அலி மன்னிப்பு கேட்டு, புதிய சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

முன்னதாக வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் முகமது அஸ்கர் அலி இந்த சட்டத்தை ஆதரித்து நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது அங்குள்ள மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அஸ்கர் அலியின் வீட்டுக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கம்பு மற்றும் கற்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்றனர். அவரது வீட்டை அடித்து நொறுக்கிய அவர்கள் பின்னர் தீ வைத்து எரித்தனர். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று அங்கு மாநிலம் முழுவதும் போராட்டம் மற்றும் பேரணிகள் நடந்தன.

ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் வக்பு திருத்த சட்டத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article