
சிவகங்கை,
சிவகங்கையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுகவில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவே தொண்டர்களின் எண்ணமாகவும் உள்ளது. அனைவரும் இணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி உண்டா, இல்லையா என்பது குறித்து பா.ஜனதாவுடன் பேசி முடிவு செய்யப்படும். மும்மொழி கொள்கை குறித்த கருத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்டசபையில் இருமொழி கொள்கைதான் வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருமொழி கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். நண்பர் விஜய் எந்த தேர்தலிலும் நின்று மக்களின் தீர்ப்பை பெறவில்லை. மக்கள் தீர்ப்பு அவரை குறித்து எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.