
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் சேர்த்து ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் விராட் கோலி 5 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஐ.சி.சி. தொடர்களில் வேறு எந்த வீரரும் குறிப்பிட்ட ஒரு அணிக்கெதிராக மூன்று முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது வென்றதில்லை. அந்த வகையில் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.