
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக முருகன் பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றிய சந்திரசேகரன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தலைமை ஆசிரியர் முருகனிடம் புகார் செய்தனர். உடனே அவர் இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மாணவிகளுக்கு ஆசிரியர் சந்திரசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் முருகன் இதுதொடர்பாக கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் சந்திரசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஆசிரியர் சந்திரசேகரன் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் சந்திரசேகரன், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி தலைமையில் போலீசார் சாம்ராஜ் நகர் விரைந்து சென்று ஆசிரியர் சந்திரசேகரனை கைது செய்தனர்.