மதுரை: அதிமுக, விஜய் மீது அண்ணாமலை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று தொழில் முனைவோர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எந்த கட்சிகள் எல்லாம் காணாமல் போகுதோ அந்த கட்சிகள் எல்லாம் விஜய்யை பார்த்து கூட்டணிக்கு அழைக்கிறது. பாஜ கட்சி, விஜய் கட்சியை எதிர்பார்த்து ஒருபோதும் இல்லை. தேய தொடங்கிய கட்சிகள், இருப்பில்லாத கட்சிகள், இளைஞர்கள் இல்லாத கட்சிகள் விஜயை அழைக்கின்றனர். இதே மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவே விஜய்யை கூட்டணிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார்.
ஏன் கூப்பிட்டார்? அவர் கட்சி எப்படி உள்ளது என அவருக்கே தெரியும். இன்று அரசியல் கட்சி துவங்கியவர்களுக்கு பாதுகாப்பு, நூற்றுக்கணக்கான போலீசார் என்றால், பிறகு எப்படி மக்களை சந்திக்க போகிறீர்கள்? கூட்டத்தில் மக்கள் சொல்லும் பிரச்னைகளை எப்படி ஞாபகம் வைத்து கொள்ளப்போகிறீர்கள்? நாளை நீங்கள் பதவிக்கு வந்தால் யார் வந்து உங்களை சந்திக்க முடியும்? அரசியலில் உள்ளவர்கள் எளிமையாக நடந்து சென்று மக்களை பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு புரோட்டா கால், கெடு என நேரம் ஒதுக்கி சந்தித்தால் மக்களை எப்படி சந்திக்க முடியும்? அரசியல் என்பது எளியவர்களுக்கா? வலியவர்களுக்கா? நட்சத்திர மதிப்பு உள்ளவர்களுக்கா? தங்களை நிரூபிக்காமல் அரசியலுக்கு வந்தவர்களுக்கா? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன். தமிழகத்திற்கு வலுவான தலைவர்கள் வரவேண்டும். ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம். தற்போது நடைபெற உள்ளது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். இவ்வாறு கூறினார்.
The post அதிமுக, விஜய் மீது அண்ணாமலை தாக்கு appeared first on Dinakaran.