திருமங்கலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி இணங்காத பட்சத்தில் கட்சியை உடைக்கவும் முயற்சி செய்து வருகிறது. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா அழைத்துப் பேசியுள்ளார். இதேபோல, செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்களும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசி வருகின்றனர். மேலும், ஒன்றிய பாஜ அரசு, செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த சூழலில், திருமங்கலம், கள்ளிக்குடி உட்பட மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில், மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அதிமுக செயலாளர் மிசா செந்தில் என்பவரின் பெயரில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் போஸ்டர்களில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி, நன்றி, நன்றி’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோரது படங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. அதில் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லை.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக உதயகுமார் உள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் இவர், எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். உதயக்குமாரின் தொகுதியான திருமங்கலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளர் என செங்கோட்டையனை குறிப்பிட்டு ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ‘அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்’: மதுரையில் போஸ்டர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.