
சென்னை,
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
அதிமுக- பா.ஜ.க. கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக்கொள்கிறார்களோ, என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் உங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள்.
திமுக ஆட்சியில் இருந்து விரட்டப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். திமுக. ஆட்சியே மக்கள் விரோத ஆட்சியாகவே நான் கருதுகிறேன். ஆகவே தமிழக மக்கள் நலன் கருதி மது, போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும், சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்வை கட்டுப்படுத்தவும் மக்கள் நலன்சார்ந்த பிரச்சினைக்காக எல்லோரும் வரவேண்டும். யார் வேண்டுமானாலும். இவ்வாறு அவர் கூறினார்.