அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு

5 months ago 14

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரின் கேள்விகளுக்கு அவை முன்னவர் துரைமுருகன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article