‘அதிமுக கூட்டணி வேண்டாம்’: பரமக்குடியில் பாஜ போஸ்டரால் பரபரப்பு

2 weeks ago 3

பரமக்குடி: அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பாஜ நிர்வாகி சார்பில் பரமக்குடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை அமித் ஷா உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையே மோதலால் கூட்டணி உருவாவதில் சிக்கல் நிலவுகிறது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கவேண்டும் என்று அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, அண்ணாமலையை மாநில பாஜ தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜ புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று வரும் தகவல்களால் பாஜ வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. அதற்கேற்றார்போல, கட்சியில் ஒரு தொண்டனாக இருந்து பணியாற்றவும் தயார் என்று அண்ணாமலையும் பேட்டியளித்திருந்தார்.

அதேசமயம், அண்ணாமலையை நீக்கிவிட்டு மாநில பாஜவிற்கு புதிய தலைவரை நியமிப்பதற்கும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கும் பாஜ கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாஜ மாவட்ட நிர்வாகி பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், ‘‘வேண்டும் வேண்டும்… அண்ணாமலை மீண்டும் தலைவராக வேண்டும். வேண்டாம், வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் – ராமநாதபுரம் மாவட்ட பாஜ செயலாளர் லயன் கே.சரவணன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘அதிமுக கூட்டணி வேண்டாம்’: பரமக்குடியில் பாஜ போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article