
சென்னை,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சட்டசபையில் இன்று கூடும் முதல் நாள் கூட்டத்தில் காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
2025-26-ம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் ஆலோசனை நடந்து வருகிறது. சட்டசபையில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்தும், அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி வருகிறார்.