
மும்பை,
இந்திய கிரிக்கெட் அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருப்பது மிகப்பெரிய பின்னடைவு என்று முன்னாள் வீரர் சித்து தெரிவித்துள்ளார். எனவே அதனை சரி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்ததாக ஐ.பி.எல். வர உள்ளது கவலைப்பட வேண்டிய விஷயமாகும். அந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பெஞ்சில் அமர்ந்திருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்து விடும். அங்கே சூழ்நிலைகள் வட துருவத்திலிருந்து தென் துருவமாக மாறும். சூழ்நிலைகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இம்முறை ஜூன், ஜூலை மாதத்தில் தொடர் தொடங்குவதால் இங்கிலாந்தில் புற்கள், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை அதிகமாக இருக்கும்.
வெள்ளைப்பந்து அணியை போல நமது டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டர்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாகும். அங்கே ஜடேஜா, பாண்ட்யா, அக்சர் படேல் ஒன்றாக இருப்பார்களா? ஜடேஜா மட்டுமே இருப்பார். அவரால் 4 - 5 விக்கெட்டுகளை எடுக்க முடியுமா? முடியாது. எனவே நீங்கள் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் போன்றவர்களை சார்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாருக்கும் பேட்டிங் செய்ய தெரியாது என்பது பிரச்சினையாகும். இதை இந்தியா சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.