சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போலத் தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் எதிர் தரப்பினர் புகார் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதில்தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அதனால், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; 6 புகார்கள் வந்துள்ளன; அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போல தெரிகிறது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும். தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் ஆணை பிறப்பிக்காவிடில் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுவதாகும். அதிமுக விவகாரம் குறித்து ஜூலை 21-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
The post அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போலத் தெரிகிறது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.