அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி வட்டி கட்டுகிறோம்: அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

1 month ago 8

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கூடலூர் தொகுதி உறுப்பினர் பொன்.ஜெயசீலன் (அதிமுக) பேசியதாவது: எனது தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றேன். ஆனால், ஒன்றைகூட நிறைவேற்ற முடியவில்லை. முதல்வர் எனது தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார். ஆனால், இன்று வரை அந்த மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் 10 ஆயிரம் வீடுகள் இருப்பதால் அங்கு மின் இணைப்பு வழங்க முடியவில்லை. மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், அது தொடர் நடவடிக்கையில் உள்ளது. பொன்.ஜெயசீலன்: 28 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், மருத்துவமனைகளை கூடுதலாக அமைத்துத் தர வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அங்கு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றவாறு அங்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். பொன்.ஜெயசீலன்: மார்ச் மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தின் கடன் அளவு ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 360 கோடியே 80 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக கடன் அளவு இருந்தது. அடுத்த 3 ஆண்டுகளில் அது 3 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

அமைச்சர் எ.வ.வேலு: நீங்கள் (அதிமுக) ஆட்சியை விட்டு சென்றபோது, கடன் அளவு ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் கோடியாக இருந்தது. அதற்கு வட்டியே ஆண்டுதோறும் ரூ.48 ஆயிரம் கோடி கட்டி வருகிறோம். இப்போதுள்ள ரூ.8.33 லட்சம் கோடி கடனில், அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் மட்டும் ரூ.6.28 லட்சம் கோடியாகும். பொன்.ஜெயசீலன்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருக்கும் போது கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுக ஆட்சியில் தான் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: அது ஒன்றிய அரசின் திட்டம். முதல் கட்ட ஆய்வுக்குத் தான் அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு என்ன இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. அதற்கான காலமும் முடிந்துவிட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் தான் அதை தடுத்து நிறுத்தியது போல் சொல்கிறார்கள். இவ்வாறு உண்மைக்கு புறம்பாக பேசுவதை நிறுத்த வேண்டும். பொன்.ஜெயசீலன்: பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது. ஆனால், பல இடங்களில் தரமில்லாமல் கட்டப்படுகின்றன. இதை தவிர்க்க, அதுபோன்று கட்டிய ஒப்பந்ததாரர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும்.

 

The post அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி வட்டி கட்டுகிறோம்: அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article