சென்னை: அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், முன்னாள் மாசுகட்டுப்பாடு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு, தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் வீடு என சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய கண்காணிப்பாளராக பாண்டியன் பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2021ம் ஆண்டு கண்காணிப்பு பொறியாளர் பாண்டியனுக்கு சொந்தமான வீடு, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இவர், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மற்றும் முதல்வருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து பாண்டியன் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருந்ததால், பாண்டியன் வழக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தானாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாண்டியனுக்கு சொந்தமான சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள வீட்டில் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதை வைத்து பாண்டியனிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.
அதேபோல், சென்னை கே.கே.நகர் டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள மருத்துவர் வரதராஜன் வீடு, சைதாப்பேட்டை ராம் காலனி மாட தெருவில் ‘என்சைஸ் டெக்னாலஜி’ என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.கே.நாதன் (எ) அலங்கநாதன் வீடு, கோயம்பேடு ஜெயநகர் 8வது தெருவில் உள்ள ‘எனோ கேர் இன்ஜினியரிங்’ என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ள குணசேகரன் அலுவலகம், அசோக் நகரில் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் பில்ரோத் நர்சிங் கல்லூரி முதல்வர் வீடு என 7க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரொக்கம் பணம், பினாமி பெயர்களில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள், வங்கி கணக்கு விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்த பிறகுதான் எத்தனை கோடி வரை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
* தொழிலதிபர் வீடு, ஆபீசில் சோதனை
காட்பாடி அடுத்த தொண்டான்துளசியை சேர்ந்தவர் மேத்தாகிரி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், பிரபல மருத்துவமனையில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்க துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு வந்தனர். ஓடை பிள்ளையார் கோயில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தாகிரி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு காட்பாடி அடுத்த தொண்டான்துளசியில் உள்ள மேத்தா கிரி வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
The post அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்: மாஜி மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: நர்சிங் கல்லூரி முதல்வர் வீடு உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.