அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்கள் தாமதமாக எப்ஐஆர் போட்டது ஏன்?: முதல்வர் கேள்வி

3 weeks ago 5

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் பெறப்பட்டு 12 நாள் கடந்தபிறகுதான் எப்ஐஆர் போடப்பட்டது. ஏன் இந்த காலதாமதம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப கூறியதையே கூறினார். அதனால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைமீது நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: சுரங்கத்துறை திருத்த சட்டம் கொண்டு வரும் போது திமுக அதை ஏன் எதிர்க்கவில்லை. டங்ஸ்டன் ஏல முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதற்கு ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், நெய்வேலி சுரங்கத்துக்கு ஒன்றிய அரசு நிலம் கையப்படுத்தும் போது ஏன் எதிர்க்கவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக எதிர்ப்பு ெதரிவிக்கவில்லை என்று யார் சொன்னது. எதிர்ப்பு தெரிவித்ததற்கு ஆதாரம் உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் போதெல்லாம் திமுக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. உங்கள் எம்பி தம்பிதுரைதான் ஆதரவு தெரிவித்தார். இதுதான் உண்மை. ஆனால் திமுகவினர் சபாநாயகர் இருக்கை அருகில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி: அமைச்சர்கள் தினமும் என்மீது அறிக்கை விட்டு வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதிகமுவினர் தினமும் திமுக குறித்து அறிக்கை விட்டு வருகிறீர்கள். அதற்கு பதில் அளிக்கும் வகையிலும், விளக்கம் அளிக்கும் வகையிலும் திமுக அமைச்சர்கள் அறிக்கை விடுகிறார்கள். அதைத் தவிர எந்த காரணத்துக்காகவும் அறிக்கை விட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. எடப்பாடி: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்முறை தொடர்பாக போடப்பட்ட எப்ஐஆர் வெளியில் கசிந்தது. அது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன?சபாநாயகர் அப்பாவு: இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. அதை திரும்பவும் இங்கு விவாதிக்க முடியாது. முதல்வர்: பொள்ளாச்சி சம்பவத்தில் எப்ஐஆர் 12 நாள் கழித்துதான் போட்டனர். ஆனால் அண்ணா பல்கலை விவகாரத்தில் புகார் வந்த உடனே எப்ஐஆர் போட்டு அந்த நபரை கைது செய்தோம். எடப்பாடி: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பிறகு நாங்கள் நடவடிக்கை எடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.முதல்வர்: ஆனால் எப்ஐஆர் 12 நாள் கழித்துதான் போடப்பட்டது. ஏன் அவ்வளவு நாள் தாமதம்? காலம் தாழ்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எடப்பாடி: இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பிறகு தான் நடவடிக்ைக எடுக்க முடியும். அதன்படிதான் நடவடிக்ைக எடுக்கப்பட்டது. முதல்வர்: அதுசரிதான், ஆனால் 12 நாள் கழித்துதான் எப்ஐஆர் போடப்பட்டது என்று நான் கூறுகிறேன். எடப்பாடி: இல்லை, நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அதற்கான ஆதாரம் இருக்கிறது. தேதியுடன் படிக்கிறேன் கேளுங்கள்.அவை முன்னவர் துரைமுருகன்: இவர் பேசுவது எப்படிஇருக்கிறது என்றால், ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவிடம் பஞ்சாயத்து நடக்கும் காட்சி இடம் பெறும். அதில், ஏம்பா… கையை பிடிச்சு இழுத்தியா… அதற்கு வடிவேல்.. என்ன கையபுடிச்சு இழுத்தியா என்று கேட்பார். அது போல இருக்கிறது. மேலும், இவர்கள் வெளி நடப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வெளியில் போவது என்றால் போங்கள். முதல்வர்: பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் பெறப்பட்ட தேதி, கைது செய்யப்பட்ட தேதியை கூறுகிறீர்கள். ஆனால் எப்ஐஆர் போட்ட தேதியை ஏன் கூறவில்லை. இந்நிலையில், அந்த விவகாரத்தை விட்டு வேறு பிரச்னைக்கு வாருங்கள் என்று சபாநாயகர் அப்பாவு ெதரிவித்தார். அதற்கு பிறகு அது குறித்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார்.

 

The post அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்கள் தாமதமாக எப்ஐஆர் போட்டது ஏன்?: முதல்வர் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article