புதுடெல்லி: அமெரிக்க குடியேற்ற விவகாரத்தில் அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் மேலும் 1.34 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தினர் கிரீன்கார்டு பெறுவதற்குள் 21 வயதை எட்டும் இந்தியர்களின் குழந்தைகள் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
குறிப்பாக, வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது டிரம்பின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அவர் முடிவுக்கு கொண்டு வந்தார். பணி நிமித்தமாக வழங்கப்படும் எச்1-பி விசா மற்றும் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளார். இதுதவிர, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இதுவரை, உரிய விசா இன்றியும், காலாவதியான விசாவுடனும் அமெரிக்காவில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிபர் டிரம்பின் அதிரடி மாற்றங்களால் மேலும் 1.34 லட்சம் இந்தியர்களுக்கு இதே போன்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணிநிமித்தமாக எச்1-பி விசா பெற்று செல்லும் இந்தியர்கள் தங்களின் குழந்தைகளை எச்-4 விசாவின் மூலம் அழைத்துச் செல்ல முடியும்.
அவ்வாறு பெற்றோரை சார்ந்து அமெரிக்கா செல்லும் குழந்தைகள் அவர்கள் 21 வயதை எட்டியதும் எச்-4 விசாவில் தொடர்ந்து அங்கு இருக்க முடியாது. அவர்கள் 21 வயதை எட்டுவதற்குள் குடும்பத்தினர் கிரீன் கார்டு பெற வேண்டும் அல்லது அந்த குழந்தைகள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான வேறொரு சட்டப்பூர்வ விசா ஏதேனும் ஒன்றை பெற வேண்டும். ஆனாலும் அவர்கள் படிப்பை முடித்து உரிய விசா பெறுவதற்கு 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது டிரம்ப் அதிபரான பிறகு இந்த 2 ஆண்டு அவகாசம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எச்1-பி விசாவில் சென்றவர்களின் குழந்தைகள் 21 வயதை எட்டியதும் அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க தாங்களாகவே நாடு கடத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 மார்ச் புள்ளிவிவரங்களின்படி, 1.34 லட்சம் இந்திய குழந்தைகள் அவர்களின் குடும்பத்தினர் கிரீன்கார்டு பெறுவதற்கு முன்பாகவே 21 வயதை எட்டி விடுவார்கள் என கூறப்படுகிறது. அவர்களின் கதி தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏற்கனவே, கிரீன்கார்டுக்கான காத்திருப்பு காலம் 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை அதிகரித்து விட்டது. எனவே, அதிக ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த குழந்தைகள் அதிகம் அறிந்திராத இந்தியாவுக்கு திரும்புவதா அல்லது வேறு நாட்டுக்கு குடும்பத்துடன் குடிபெயர்வதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கலிபோர்னியாவில் வசிக்கும் 20 வயது நர்சிங் மாணவி ஒருவர் கூறுகையில், ‘‘வரும் ஆகஸ்ட் மாதம் 21 வயதை நான் எட்ட இருக்கிறேன். நான் இங்கு 6 ஆண்டுகளாக வசிக்கிறேன்.
எனது கல்வி, நண்பர்கள், எதிர்காலம் எல்லாமே இங்கு தான் உள்ளது. ஆனால் எச்-4 விசாவுக்கான 2 ஆண்டு கூடுதல் அவகாசம் இல்லாததால் சில மாதங்களில் இங்கு வசிப்பதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிடுவேன். அதன் பின் எப்-1 மாணவர் விசா பெற்று நான் தொடர்ந்து இங்கு வசிக்கலாம். ஆனாலும் அந்த விசா பெறும் போது நான் வெளிநாட்டு மாணவியாகி விடுவேன். இங்கு எனக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் பறிபோகும். கல்விக்கான செலவு அதிகரிக்கும்.
ஏற்கனவே அமெரிக்காவில் வாழ்வதற்கான செலவு அதிகரித்து வரும் நிலையில் கல்விச் செலவு அதிகரிப்பது எனது குடும்பத்தை பாதிக்கும்’’ என்கிறார். தற்போது 10 லட்சம் இந்தியர்கள் இபி-2 மற்றும் இபி-3 கிரீன்கார்டு பெற நீண்ட காத்திருப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கிரீன்கார்டு பெற 134 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் அவர்களின் குழந்தைகள் 21 வயதை எட்டிவிடுவார்கள் என்பதால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இந்திய பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.
* வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது
அமெரிக்க செனடர் பெர்னி சான்டர்ஸ் கூறுகையில், ‘‘கடந்த 2022 முதல் 2023க்குள் எச்-1பி விசா வழங்கும் முன்னணி 30 நிறுவனங்கள் 34,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தி உள்ளன. அதே சமயம் அவர்கள் 85,000 அமெரிக்க பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி உள்ளன. எனவே வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது’’ என்றார்.
* கனடா, இங்கி.மீது கவனம்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குள் குழந்தைகள் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளவர்கள், விசா நடைமுறைகள் கடுமையாக இல்லாத கனடா, இங்கிலாந்து நாடுகளுக்கு குடிபெயர்வது குறித்தும் யோசித்து வருகின்றனர். பல்வேறு விதிமுறை மாற்றங்கள் மூலம் குடியேற்ற விவகாரத்தில் அதிபர் டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் என்றும் இந்தியர்கள் புலம்புகின்றனர்.
The post அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் மேலும் 1 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து: அமெரிக்காவில் இருந்து தானாகவே வெளியேற நிர்ப்பந்தம் appeared first on Dinakaran.