அதிகப்படியான கார்பன் உமிழ்வால் சுற்றுச்சூழல் பாதிப்பு மாசு கட்டுப்பாட்டு சான்று பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள்

3 months ago 16

*போக்குவரத்து துறை கவனிக்குமா?

புதுச்சேரி : புதுச்சேரியில் மாசுக்கட்டுப்பாட்டு சான்று பெறாமல் தொடர்ந்து இயக்கப்படும் வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு அரசு வாகனங்கள், பேருந்துகள் மற்றும் தனிநபர் வாகனங்கள் காற்று மாசுக்கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. காற்று மாசுபாட்டை குறைக்கவும், கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாகனங்களில் இருக்க வேண்டும் என்பதற்காக மாசுக்கட்டுப்பாட்டு சான்று அவசியமானது என போக்குவரத்து விதிகள் தெரிவிக்கிறது.புதுச்சேரியில் 15க்கும் மேற்பட்ட புகை பரிசோதனை மையங்கள் இதற்காக இயங்கி வருகிறது. ஆனால் அதன்படி தற்போது சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள், பரிசோதனை செய்து இந்த சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோர் இந்த சுற்றுச்சூழல் சான்றுகளை பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. குறிப்பாக பேருந்துகள், சரக்கு வாகனங்கள், பழைய டெம்போக்கள் மற்றும் கார்கள், அரசுத்துறை வாகனங்கள் இந்த பட்டியலில் அடங்கும்.தற்போது இருசக்கர வாகனங்களில் 4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான டூ-ஸ்ட்ரோக் இன்ஜின்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இது காற்று மாசுபாட்டுக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. இத்தகைய வாகனங்கள் முழுமையாக எரிபொருளை எரித்து வெளியேற்றாமல் அரைகுறையாக வெளியேற்றுவதால் காற்றில் கார்பன் அளவு அதிகரிக்கிறது.

குப்பைகளை சேகரித்து செல்லும் (காம்பயாக்டர்கள்) அதிக கரும்புகைகளை கக்கியபடி செல்வதை சாதாரணமாக காணலாம். பெரும்பாலானோர் தங்கள் வாகனங்களில் கார்பன் உமிழ்வை அளவு சரிபார்க்க வேண்டுமென கவலைப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இ-பைக் போன்ற போக்குவரத்து அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் கேட்டபோது, வாகனங்கள் ஆயுள் வரியின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் அவை உடற்தகுதி சான்றிதழ்களை (எப்.சி.) புதுப்பிக்கும் போது மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை பெறுகின்றன. இடைப்பட்ட சோதனை செய்து அளவினை சரிபார்க்கப்படாமல் இயக்கப்படுகிறது.

அரசு வாகனங்கள், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தவறாமல் புதுப்பிப்பதை போக்குவரத்து துறை ஆண்டுதோறும் உறுதி செய்ய வேண்டும், பல தனியார் வாகனங்கள் இந்த சான்றிதழ்களை பெறாமல் தடையின்றி இயக்கி வருகிறது. பல டெம்போக்கள், ஆட்டோரிக்க்ஷாக்கள் மற்றும் கார்கள் தொடர்ந்து கரும்புகையை கக்கியபடி சாலைகளில் செல்வது சாதாரணமாக காண முடிகிறது. இத்தகைய வாகனங்களில் கார்பன் உமிழ்வு தரநிலைகள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே சந்தேகப்படும் படியான வாகனங்களை போக்குவரத்து காவல்துறை சாலைகளில் மாசு உமிழ்வு சோதனைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர்கேடு குறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்சிகளை புதுப்பிக்கும் முன், வாகனங்களின் மாசு உமிழ்வு தரத்தை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும். கண்டமான வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும், என்றனர்.

The post அதிகப்படியான கார்பன் உமிழ்வால் சுற்றுச்சூழல் பாதிப்பு மாசு கட்டுப்பாட்டு சான்று பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article