அதிக பசியை கட்டுப்படுத்த!

3 hours ago 1

நன்றி குங்குமம் டாக்டர்

பசியைக் கட்டுப்படுத்தும் பல உணவுப் பொருட்கள், வீட்டின் சமயலறையிலேயே இருக்கும். ஆனால் நமக்கு அது தெரிவதில்லை. அதுபோன்று நம்மை நேரடியாகச் சமையலறைக்கு அழைத்துக் கொண்டு போய், ருசிக்கச் செய்யும் சில உணவு வகைகளால் பசியானது மேலும் கூடுகிறது. இப்படி வீட்டிலுள்ள வயதானவர்களுக்கே ருசி பார்க்கத் தூண்டும் சில உணவுவகைகளுக்கு முன்னால், இளைஞர்களின் நிலையைக் கூறவும் வேண்டுமா.. எனவே, அகோரப் பசியை அடக்க கீழ்க்காணும் சிலவற்றை முயற்சித்துப் பார்க்கலாம்.

காய்ந்த (உலர்) திராட்சையை நெய்யில் பொரித்து சாப்பிடப் பசி அடங்கும். பட்டினியால் ஏற்படும் வயிற்றுக் கொதிப்பு அடங்கும், கபம் இறுகி வறண்டு வரும். இருமல் குணமாகும். பன்னீரில் ஊற வைத்துப் பிழிந்து வடிகட்டிச் சாப்பிட, பசியின் தீவிரத்தால் ஏற்படும் இதயப் படபடப்பு, அதிக இதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். சிலருக்கு பலவீனத்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், அவர்களும் இதைச் சாப்பிடலாம்.

இனிப்பும், குளிர்ச்சியும் நிறைந்த தேங்காயைத் துருவி, தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, அந்த தேங்காய்ப் பாலைக் குளிர்ச்சியாகக் குடிக்க, பசியின் தீவிரமானது அடங்கி ஜீரணிக்கத் தாமதமாகும். தொண்டை, மேலண்ணம், நாக்கு, கன்னத்தின் உள்சதை இவற்றில் ஏற்படுகிற எரிச்சல் ஆகியவற்றுக்கு இதன் பாலை வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம். இந்தப் பாலுடன் கசகசா சேர்த்து அரைத்துப் பாயசம் செய்து சாப்பிடலாம். புஷ்டி வீர்யம் தரும்.

நெல்லிக்காயைச் சாறு பிழிந்து சர்க்கரையோ கற்கண்டோ சேர்த்து பாகாக்கி மைசூர்பாகு போல் வில்லைகளாக்கி வெட்டி வைத்திருந்து சாப்பிட, வயிற்றுக் கொதிப்பு, அதிகபசி குறையும்.
இனிப்பும் குளிர்ச்சியுமுள்ள ஜவ்வரிசியை கஞ்சி கூழ், பாயசம் என்ற வகைகளிலெல்லாம் சாப்பிட, புஷ்டி தரும் உணவுப் பொருளாகவும் நீர்த்தாரை, பசியினால் ஏற்படும் இரைப்பை அழற்சி ஆகியவற்றை நீக்கும்.

கசகசாவை பசுவின் பால் விட்டரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். பசியை மட்டுப்படுத்தி குடற்புண்ணை ஆற்றும். உடலிற்கு வலிவு தரும்.
பன்னீர்ப் பூ, ரோஜாப் பூ போன்றவற்றில் துவர்ப்புள்ளதால் இதயம், கல்லீரல், ரத்தக் குழாய்களுக்கு வலிவுதரும். வயிற்றில் வாயு சேரவிடாது. குடலுக்கும் குளிர்ச்சியும் மன அமைதியும் சந்தோஷமும் தரும். பானகமாக, மணப்பாகாக, குல்கந்தாக பயன்படுத்த அகோரப் பசியை மட்டுப்படுத்தலாம்.

அதிகம் பசியுள்ளவர்கள் உணவில் அடிக்கடி பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றைச் சாப்பிட மிகவும் நல்லது.முந்திரிப் பருப்பை நெய்விட்டு வறுத்துச் சாப்பிட, பசி மந்தமடையும், தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் சேர்த்துச் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் பசிச் சூடானது குறைந்துவிடும்.

தொகுப்பு: ரிஷி

The post அதிக பசியை கட்டுப்படுத்த! appeared first on Dinakaran.

Read Entire Article