அதனால்தான் ரோகித் ஓய்வை அறிவித்து விட்டார் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

9 hours ago 1

மும்பை,

விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி ஓய்வை அறிவித்தார்.

கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை ரோகித் சர்மா சந்தித்தார். குறிப்பாக பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்பிய ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இருப்பினும் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அவர் திடீரென ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது கடைசி 15 இன்னிங்ஸ்களில் வெறும் 164 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதனாலயே அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் மஞ்ச்ரேகர், "அவரது (ரோகித்) கடைசி 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிலும் 10 இன்னிங்ஸ்கள் சொந்த மண்ணில் வங்காளதேசம் & நியூசிலாந்துக்கு எதிரானவை. சராசரி 10.9 மட்டுமே. தற்போதைய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனாலயே அவர் ஓய்வை அறிவித்து விட்டார்" என்று கூறினார்.

Read Entire Article