அண்ணாமலை பற்றி பேசுவது போரில் எலி பிடிப்பது போன்றது: பாஜ போராட்ட அறிவிப்புக்கு செல்லூர் ராஜூ பதிலடி

3 months ago 20

மதுரை: அண்ணாமலை குறித்து பேசுவது, போருக்கு போகும் போது எலி பிடிக்கும் வேலை போன்றது என பாஜவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி தந்து உள்ளார். மதுரை நகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், ‘‘நீங்கள் அண்ணாமலையை விமர்சித்து பேசியதற்காக மதுரையில் பாஜவினர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனரே?’’ என்று கேட்டனர். இதற்கு செல்லூர் ராஜூ, ‘‘அண்ணாமலை பற்றி எல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள். தலையை ஒருவர் ஆட்டினால் நாம் என்ன சொல்வோம்? என்னப்பா சொல்வோம்? ஆட்டுக்குட்டி போல தலையை ஆட்டுவதாகத்தானே சொல்வோம். போருக்கு செல்லும்போது, இதுபற்றி பேசுவதெல்லாம் எலி பிடிக்கும் வேலை போன்றது’’ என்றார்.

தொடர்ந்து ஓபிஎஸ் டெல்லி சென்றது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘அவர் மக்களால் மறக்கப்பட்டவர். வேறு விஷயம் இருந்தால் சொல்லுங்கள்’’ என்றார். நடிகர் விஜய் கட்சி சார்பில் மாநாடு நடைபெற இருப்பது குறித்தும், அவரது கட்சியால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்றும் கேட்டதற்கு, ‘`அதிமுகவுக்கு போட்டியா என கேட்கக்கூடாது. தம்பி விஜய் வெற்றி கழகம் ஆரம்பித்துள்ளார். இப்போதுதான் மாநாடு நடத்த போகிறார். சின்னப்பையன் வளர வேணாமா? விஜய் இளைஞர். ஒருத்தர் வர்றதை தடுக்கக் கூடாதப்பா. எங்களுக்கு பாதிப்பே இல்லை. அவரு கட்சி ஆரம்பிக்கிறதால எங்களுக்குத்தான் பெருத்த லாபம்’’ என்றார்.

 

The post அண்ணாமலை பற்றி பேசுவது போரில் எலி பிடிப்பது போன்றது: பாஜ போராட்ட அறிவிப்புக்கு செல்லூர் ராஜூ பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article