அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தேசிய மகளிர் கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டம்

3 weeks ago 4

சென்னை: சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை மாணவிக்கு நடைபெற்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உதவி மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க ‘போஷ்’ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, புகார் தொடர்பாக விசாரணை நடத்துவர்.

அண்ணா பல்கலைக்கழகம் சம்பவத்தில், போஷ் குழுவுக்கு புகார் வரவில்லை. போலீசாரின் விசாரணைக்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசோ, நாங்களோ இதில் அரசியல் செய்து ஆதாயம் பார்க்க விரும்பவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறைக்கும், தேசிய மகளிர் கமிஷனுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘காவல் உதவி செயலியை மாணவிகள் செல்போனில் பதிவிறக்க வேண்டும்’
ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும். இச்செயலியை Google Play Store, App Storeல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

* தவறாக புரிந்து கொள்ளப்பட்டது
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டியின்போது, போஷ் குழுவிடம் மாணவி புகார் தெரிவிக்கவில்லை, போலீசிடமே புகார் தெரிவித்ததாக கூறிய கருத்துக்கும், போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, அமைச்சர் கோவி.செழியன் அளித்த விளக்கம்: அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம், அண்ணாபல்கலைக்கழகத்தின் போஷ் குழுவை உள் விசாரணை குழுவினை சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு, பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான், இந்த சம்பவம் தொடர்பாக போஷ் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் போஷ் குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தேசிய மகளிர் கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article