
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
ஞானசேகரனிடம் சிறப்பு குழு நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்து இருந்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கிறிஸ்டியன் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிகையை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தாக்கல் செய்துள்ளன்ர். ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம், ஆதாரங்கள், ஆவணங்கள், சொத்து முடக்க நடவடிக்கை, சாட்சியங்களை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துகிறது.