
சென்னை,
கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் குப்பை கொட்டும் இடமாக உருமாற்றப்பட்ட வடசென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், ஏற்கனவே உள்ள குப்பைகளை அகழ்ந்தெடுத்துவிட்டு, புதிதாக சேரும் குப்பைகளை அகற்ற 75 ஏக்கர் பரப்பளவில் 1,600 கோடி செலவில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு திட்டமிட்டமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
கொடுங்கையூர் பகுதியில் மலை மலையாக குவிக்கப்பட்டு கொடும் நோய்த்தொற்றுக்களை உருவாக்கும் குப்பைக் கிடங்கினை அகற்றக்கோரி கொடுங்கையூர் மக்கள் கடந்த 30 ஆண்டிற்கும் மேலாக தொடர்ப் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போதுதான் அக்குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி 640 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒருவழியாக குப்பைகள் அகற்றப்படுவதை எண்ணி வடசென்னை மக்கள் தற்போதுதான் நிம்மதியடைந்த நிலையில், அதனைக் கெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய குப்பைகள் எரி உலை திட்டத்தை செயல்படுத்த முனைவதால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தி.மு.க. அரசின் இத்திட்டம் எளிய மக்கள் வாழும் பகுதியான கொடுங்கையூரில் மீண்டும் குப்பைகள் கொட்டுவதை ஊக்குவிப்பதாக ஆகிவிடும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அப்பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்காக எரி உலையில் எரிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகளால் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை உடைய காற்றுகள் வெளிப்பட்டு கொடும் நோய்களை உருவாக்கவும் காரணமாக அமையும். எனவே தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முனையும் எரி உலை திட்டம் என்பது ஒரு தீங்கிற்கு மாற்றாக மற்றொரு தீங்கை அனுமதிப்பது போன்றதாகும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குப்பை எரி உலை திட்டம் முற்றாக தோல்வியடையந்து அம்மாநில அரசுகளால் கைவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது கொடுங்கையூரில் எரி உலை அமைக்க ஒப்பந்தம் பெறப்பட்டுள்ள தனியார் நிறுவமான எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் நிறுவனமானது, ஏற்கனவே ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி வரும் சஸ்டெய்னபிள் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
சஸ்டெய்னபிள் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை செய்யும் இடங்களில் குப்பைகளை முறையாகக் கையாளாமல் தூய்மையற்றதாகவும், பல்வேறு நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை நாசமாக்குவதாகவும் அம்மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள 18 ஏரிகள் நாசமாகிவிட்ட நிலையில், அதன் துணை நிறுவனத்தை வடசென்னைக்கு அழைத்து வந்து கொடுங்கையூரில் குப்பைகளை பாதுகாப்பாக எரிக்கப்போவதாக கூறுவது பேராபத்தானதாகும்.
ஏற்கனவே, வடசென்னையிலுள்ள மணலி சின்ன மாத்தூரில் ஒவ்வொரு நாளும் 10 டன் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் நச்சுப்புகையே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெளியாகி அதனால் மக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதைவிட பன்மடங்கு அதிகமாக 1,400 டன் அளவிற்கு குப்பைகளை தினமும் எரித்தால் வடசென்னையே சுற்றுச்சூழல் பேரழிவினை எதிர்கொள்ள நேரிடும்.
குப்பை எரிஉலை திட்டம் பாதுகாப்பானது என்றால் அதனை சென்னையின் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் செயல்படுத்தலாமே? குப்பை மேடென்றால் ஏன் எப்பொழுதும் 20 லட்சம் எளிய மக்கள் வாழும் வடசென்னை பகுதியிலேயே செயல்படுத்த முனைகிறீர்கள்? எரி உலை திட்டம் செயல்படுத்தும்போது ஒவ்வொரு நாளும் உருவாகும் நச்சுக்காற்றினை கட்டுப்படுத்த என்ன திட்டம் உள்ளது? அதில் தினமும் உருவாகும் 500 டன் நச்சுச்சாம்பலை எங்கே கொண்டு போய் கொட்டூவீர்கள?
வருடத்திற்கு ஒரு நாள் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் கரிப்புகையை கட்டுப்படுத்தவே, சென்னை மாநகரில் நூற்றுக்கணக்கான விதிமுறைகளை உருவாக்கி, காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் நெருக்கமாக வாழும் வடசென்னையில் ஒவ்வொரு நாளும் 1400 டன் குப்பைகள் எரிப்பதை எப்படி அனுமதிக்கிறது? வடசென்னையில் வாழ்பவர்கள் மக்கள் இல்லையா? அல்லது அவர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா? என்ற கேள்விகளுக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் பதிலென்ன?
ஆகவே, நிலத்தையும், நீரையும், காற்றையும் நாசமாக்கி, மண்ணின் வளத்தையும் மக்கள் நலத்தையும் சீர்கெடுத்து, சுற்றுச்சூழலை முற்றுமுழுதாக அழித்தொழிக்கும் கொடுங்கையூர் புதிய எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தி.மு.க. அரசின் கொடுங்கையூர் புதிய குப்பை எரி உலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று 25.05.2025 முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, மக்கள் நல கோரிக்கைகள் வெல்லும் வரை தோள் கொடுத்து துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.