சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 நாள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 19-ம் தேதி அனுமதி வழங்கியது.
கடந்த 21-ம் தேதி விசாரணையின்போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதேபோல் நேற்று முன்தினமும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருமுறை சேர்க்கப்பட்டார். பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில், 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நேற்று அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.