தா.பழூர், அக். 4: அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி சம்பந்தம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கிராம வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு வாசித்து கிராமசபை ஒப்புதல் பெறப்பட்டது. இதில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த காலங்களில் குறைந்த அளவு குடிநீர் இணைப்புகள் இருந்த நிலையில் ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது சுமார் 700 குடிநீர் இணைப்புகள் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரே ஒரு சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வைத்து கிராம மக்களின் குடிநீர் சேவையை தீர்க்க முடியவில்லை. எனவே கூடுதலாக அணைக்குடம் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உடனடியாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்ற ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள் வலியுறுத்தலின் பெயரில் வழக்கமான கிராம சபை தீர்மானங்களுடன் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அணைக்குடம் கிராமத்தின் குடிநீர் பிரச்சனை உடனடியாக முடிவுக்கு வரும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கூட்டத்தின் நிறைவாக ஊராட்சி மன்ற உறுப்பினர் இந்திரா முருகன் நன்றி கூறினார்.
The post அணைக்குடம் கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு வரும் appeared first on Dinakaran.