சென்னை: சென்னையில் ரூ.22 கோடியில் 6 அமுதம் அங்காடிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அப்போது முன்னுரை ஆற்றிய அமைச்சர் சேகர்பாபு;- இந்தியப் பெருநகரங்களில் பெருமை வாய்ந்த நகரம் நம் சென்னை பெருநகரம். வாழ்கிறவர்களையும் வாழ்வாதாரம் தேடி வருகிறவர்களையும் தாய்மடி போல தாங்கிக் கொள்கின்ற நகரம் இது. இந்த மாநகரை காலத்திற்கேற்ப வளர்ச்சி அடைய வைக்க, 1972 ஆம் ஆண்டு “சரித்திரத்திற்கே பெருமை சேர்க்கும் சகாப்த நாயகர்” முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் “சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்” உருவாக்கப்பட்டது.
காலத்தை வென்ற காவியத் தலைவர் ஓய்வெடுக்கும் இடத்தில் – வங்கக் கடல் அலைகள் வந்து வந்து தமிழ்படித்துச் செல்லும் எங்கள் தங்கத் தலைவர் – கலைஞரின் புகழ் மீது பூக்களை அள்ளித் தூவி என் பதிலுரையைத் தொடங்குகிறேன். சென்னைப் வளர்ச்சிக் குழுமத்தை, திட்ட அனுமதி வழங்குதல் என்கிற எல்லைக்குள் மட்டும் நிற்காமல் – கல்வி நிலையங்கள், நூலகங்கள், படைப்பகங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் என மக்கள் நலப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானங்களை உருவாக்கிக் கொடுத்து சமுதாய வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்க செய்தவர் முதல்வர். எங்கள் முதல்வர் எதையும் புதுமையாக சிந்திக்கின்றவர்.முற்காலத்தையும் தற்காலமாக மாற்றுகிற பொற்கால ஆட்சியாளர்.
* சலவைக் கூடம்
மாநகரத்தின் “முதல் டோபிகானா” என்று அழைக்கப்படும் சலவைக்கூடம் சென்னை சேத்துப்பட்டில் 1902ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் மூர் என்பவரால் கட்டப்பட்டது. 122 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த சலவைக் கூடத்தை தொழிலாளர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். அவர்களின் சிரமம் அறிந்து இந்த சலவைக்கூடத்தை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என்று முதல்வர் இட்ட கட்டளைக்கிணங்க நவீன வசதிகளுடன் இந்த சலவைக் கூடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் புரசைவாக்கம், கான்ட்ரான்ஸ்மித் சாலையிலுள்ள 75 ஆண்டுகால சலவைக்கூடமும் புதுப்பிக்கப்படுகிறது. கறை நீக்கும் சலவைத் தொழிலாளர்களின் குறை நீக்குபவர் எங்கள் முதல்வர்.
* ஏரிகள்
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. காலம் காலமாக சென்னை மாநகர மக்களுக்கு தாய்ப்பால் போல தண்ணீரை தந்துகொண்டிருப்பவை ஏரிகள். ஏரி வளங்களை சீரமைப்பு செய்யும் மகத்தான பணிகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்கள் கட்டளையிட்டிருக்கின்றார். 1876 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழல் ஏரியை மேம்படுத்தும் பணி திட்டமிட்டு முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. மேலும் 12 ஏரிகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.‘நீர்நிலையாக இருக்க வேண்டும், அதில் நீர்- நிலையாக இருக்க வேண்டும்’ என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது ஏரிகள் மேம்பாட்டுத் திட்டம். ‘குளங்களும் நிரம்பி இருக்கட்டும், குடங்களும் நிரம்பி இருக்கட்டும்’ என்ற முதல்வரின் நல்லெண்ணத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மகிழ்ச்சியடைகிறது.
* பேருந்து நிலையங்கள்
கலைஞர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கினார்கள். தனிப்பட்டவர்களுக்கு சென்ற வருவாயை மக்களுக்காக மடை மாற்றிய தலைவர் கலைஞர், 1967 ஆம் ஆண்டு அம்பத்தூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்கள். அந்த பெருமைக்குரிய பேருந்து நிலையத்தை 57 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரின் வழிகாட்டுதலோடு கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்கின்ற பணியை மேற்கொண்டுள்ளோம்.
52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சென்னை மாநகரின் முதல் பேருந்து நிலையமான தண்டையார்பேட்டை பேருந்து முனையமும் அனைத்து வசதிகளுடன் தற்போது நவீனப்படுத்தபட்டு வருகிறது.
சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இம்முனையத்தை முதல்வர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். செங்கல்பட்டில் ரூ.97 கோடி மதிப்பீட்டிலும், மாமல்லபுரத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டிலும் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில், 9 மாநகர பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பேருந்து நிலையங்கள் பயணிகளின் சிரமங்களை குறைத்து பயணங்களை எளிதாக்கும்… இனிதாக்கும்…
* பூங்காக்கள்
பூங்காக்கள் மகிழ்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவும், பயன்படுகின்ற பசுமைப் பணிமனைகள். சென்னைப் பெருநகரில் புதுப்புதுப் பூங்காக்களை அமைக்கின்ற பணியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கியிருக்கின்றார் பசுமை நாயகர் எங்கள் முதல்வர். சென்னையில் முதன்முறையாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் காலநிலைப் பூங்கா,
சென்னைப் போரூரில் 16.63 ஏக்கர் நிலப்பரப்பில் ஈரநிலை பசுமை பூங்கா இந்த பூங்காவிற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் நம் மண்ணின் மைந்தர் “டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்கா” என பெயர் சூட்டி பெருமை சேர்த்திருக்கிறார்கள். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுப்பூங்கா. காலநிலைப் பூங்கா, ஈரநிலப்பசுமை பூங்கா, நீரூற்றுப் பூங்கா என புதுப்புது பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் தொடரும். சென்னை நகரம் முழுவதும் பசுமைப் புரட்சி படரும்!பூங்காக்கள் பெருநகரத்தின் காட்சிக்கு மட்டுமல்ல… திராவிட மாடல் ஆட்சிக்கும் அழகூட்டுகின்றன.
* விளையாட்டு மைதானங்கள்
விளையாட்டு என்பது உடலுக்கு பலம் தருவது, உள்ளத்துக்கு நலம் தருவது. இது விளையாட்டுத் துறையின் பொற்காலம், எங்கள் துணை முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு தடம் தெரியாத வீரர்கள் – வெற்றித் தடம் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் வாகை சூடி வருகிறார்கள். சென்னைப் பெருநகர பகுதிகளில் பழமையான மற்றும் புதிய 19 விளையாட்டு மைதானங்கள் தற்போது நவீன அம்சங்கள் கொண்ட உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த புளியந்தோப்பு கன்னிகாபுரத்திலுள்ள விளையாட்டு மைதானமும் உள்ளது. இந்த மைதானங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கும் விளையாட்டு துறையில் நம் துணை முதல்வரின் பெயர் நிலைத்து நிற்கும்
* வீடுகள்
சென்னை பெருநகரின் எழில்முகம் தென் சென்னை என்றால் தொழில்முகம் வடசென்னை. கோட்டை கட்டியவர்கள் குடிசையிலும் தார்ச்சாலை அமைத்தவர்கள் சாலை ஓரங்களிலும் வாழ்கிற இடமாக இருந்த வடசென்னையை. பலரும்
ஓரக்கண்களால் பார்த்துவிட்டு கடந்து சென்றபோது அதை ஈரக்கண்களால் பார்த்து இரக்கப்பட்டவர்கள் கலைஞரும்!… நம்முடைய முதல்வரும் தான்!… 2023-24 ஆம் ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி மாண்புமிகு முதல்வர் அவர்கள் “வடசென்னை வளர்ச்சித் திட்டத்தைத்” தொடங்கி வைத்தார்கள்! ரூ.1,000 கோடியில் தொடங்கிய இத்திட்டம் இன்றைக்கு பல துறைகளின் பங்களிப்புடன் ரூ.6,848 கோடி மதிப்பீட்டில் 252 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடசென்னை மக்களுக்காக 6,000 கோடிக்கு மேல் தந்த முதல்வருக்கு நூறாயிரம் கோடி முறை நன்றி சொல்ல வடசென்னை மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். இது முடிவு அல்ல. ஒவ்வொருவர் வாழ்விலும் விடிவு வரும் வரை தொடரும். இந்த பணிகளை நிறைவேற்ற துணை முதல்வர் களத்தில் இருக்கின்றார். கலைஞரின் வழிதடத்தில் ஆட்சி கண்ட நம் முதல்வர் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் 1,476 குடும்பங்களுக்கு, தலா 400 சதுர அடியில் நிரந்தரக் குடியிருப்புகள் கட்டித் தருகிற வாய்ப்பை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கியிருக்கிறார். இந்த மனிதநேயப்பணி இக்குழுமத்தின் முதல் முயற்சி. குடிசையில் இருந்தவர்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தி அழகு பார்ப்பது எங்கள் முதல்வர் ஆட்சி! அதற்கு இந்த திட்டமே ஒரு சாட்சி!
* முதல்வர் படைப்பகங்கள்
“கல்விதான் மிகப்பெரிய சொத்து! அதை உங்களிடமிருந்து யாரும் திருடிவிட முடியாது!” என்று சொன்னவர் எங்கள் திராவிட மாடல் நாயகர்! கல்விக்காகப் புதுமைப் பெண் திட்டம். கல்விக்காகத் தமிழ்ப்புதல்வன் திட்டம்….. கல்விக்காகக் காலை உணவுத் திட்டம் தந்து தமிழ்நாட்டையே கல்விநாடாக மாற்றியவர் நம் முதல்வர், வசதியற்ற மாணவர்கள் வசதியாய் படிக்கவும் – வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவும், முதல்வரின் சிந்தனையில் உதித்த மகத்தான திட்டம் தான் “முதல்வர் படைப்பகம்”. வளர்ந்து வரும் நவீன யுகத்தில், உலக அறிவு பெறுவதற்கு உண்டான அனைத்து வசதிகளுடன் கூடிய,
மாநிலத்தின் முதல் படைப்பகத்தை கொளத்தூரில் 04.11.2024 அன்று முதல்வர் தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்கள். இதுவரையில் சுமார் 30,000-திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கும், பணி செய்வதற்கும் மற்றும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக – குறிப்பாக வடசென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் படைத்திட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு உத்தரவிட்டிருக்கின்றார் முதல்வர். நமது “முதல்வர் படைப்பகங்கள்” தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
* பள்ளிக்கூடங்கள்
தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் உருவாகிறது. முதல்வரின் நல்லாட்சியில் சென்னைப் பெருநகர பகுதியின் 18 பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1962ஆம் ஆண்டு மேனாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவச்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது புழல் அரசு பள்ளி. முதல்வர் அவர்கள் அந்த பள்ளியை கண்டறிந்து மாணவர்களின் நலனுக்காக வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்களை நவீன வசதிகளுடன் சீரமைக்க உத்தரவிட்டார்கள். அத்துடன், கல்விக்கே முதலிடம் தரும் நம் முதல்வரின் வழிகாட்டுதலோடு சென்னை பெருநகரில் மேலும் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல பள்ளிகளை தேர்ந்தெடுத்து சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றோம். இந்த கல்விப் பணிகளால் முதல்வர் அவர்களை அனைவரும் “கல்வி நாயகர்” என போற்றுகிறார்கள்.
* தீவுத்திடல்
நம் முதல்வர் உழைக்கின்ற ஒவ்வொருவரையும் உயர்த்திவிட வேண்டுமென்ற எண்ணம் படைத்தவர். வடசென்னையின் நுழைவு வாயிலாக இருக்கும் தீவுத்திடலில் கடந்த 43 ஆண்டுகளாக வர்த்தக பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பொருள் ஈட்டும் இடமாகவும், மக்கள் பொழுதுபோக்கும் இடமாகவும் தீவுத்திடல் திகழ்கிறது. தற்காலிக அரங்கங்களில் பொருட்காட்சிகள் நடைபெற்று வரும், இந்த பகுதிக்கு அருகில் 1,60,000 சதுரடியில் 20 அரங்கங்களை கொண்ட நிரந்தர பொருட்காட்சி அரங்கம், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அமைய இருக்கின்றது.
இந்த அரங்கை இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார். இந்த அரங்கம் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமையும். இதன்மூலம் – தீவுத்திடல் தொழில்முனைவோரின் சிரமங்களுக்கு தீர்வுத்திடலாக அமையும் வண்ணமீன் உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், நிரந்தர விற்பனைக் கூடத்தை அமைத்துத் தர வேண்டுமென்பது நம் முதல்வரின் விருப்பம். அதிக பொருளீட்டும் தொழிலாக மாறி வரும் வண்ணமீன் வர்த்தகத்தை பாதுகாக்க மீன்வளத்துறையுடன் இணைந்து 3.94 ஏக்கர் நிலத்தில், 1,25,000 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய 188 கடைகள் கொண்ட கொளத்தூர் – வண்ணமீன் சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
* இணைய வழித்திட்ட அனுமதி
விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிற துறைதான் வளரும் என்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியின் பயனாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் திட்ட அனுமதிக்கான விண்ணப்ப செயல் முறையை, இணைய வழிச் செயல்முறையாக அறிமுகப் படுத்தினோம். தற்போது இந்த திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விண்ணப்பித்தல் தொடங்கி திட்ட அனுமதி பெறும்வரை அனைத்துச் செயல்பாடுகளும் இணைய வழியில் நடைபெறுவதால் பயனாளிகளுக்கு நேர விரயம் ஏற்படாமல் வெளிப்படைத் தன்மையான நடைமுறைக்கும் வழிவகுக்கிறது. இந்த திட்டம் மூலம், திட்டமிடல் அனுமதிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 826 ஆக இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் 1,331 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவே இந்தத் திட்டம் சிறப்பான திட்டம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
* அறிவிப்புகள்
வாழ்வதற்கு வசதி செய்து தந்து வசதியாக வாழவும் வைக்கும் காலம் மனிதநேய முதல்வரின் மகத்தான காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தாரக மந்திரத்தோடு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இந்த ஆண்டிற்கான அறிவிப்புகளை இப்போது அறிவிக்கிறேன்.
* 60 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னை பாரதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சரித்திரம் படைத்து வரும் புதுமைப்பெண் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்கிட இந்த கல்லூரியில் கூடுதல் கட்டமைப்புக்காக ரூ. 25 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் 9 அரசுப் பள்ளிகள் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.
* சென்னையில் 6 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
* சென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் ரூ. 40 கோடியில் அமைக்கப்படும்.
* பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடியில் மேம்படுத்தப்படும்.
* வடசென்னையில் 4 இடங்களில் குளிர்சாதன பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னையில் 7 பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னையில் 6 அமுதம் அங்காடிகள் ரூ. 22 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னை வண்டலூர் கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப் பொருள் கிடங்கு அமைக்கப்படும்.
* இராயபுரம், சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும்.
* இராயபுரம், பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும்.
* கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் மேம்படுத்தப்படும்.
* சென்னை குரோம்பேட்டையில் ரூ. 10 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
2025-26ஆம் ஆண்டிற்கு அறிவித்த அறிவிப்புகள் மொத்தம் 15, இந்த அறிவிப்புக்களால் எடுக்கப்படும் திட்டங்களின் மொத்த எண்ணிக்கை 60. முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் 65 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 18 திட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த 4 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி மக்களுக்கு தேவையான 249 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் எங்கள் துறையை அனுதினமும் இயக்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் முதல்வர் தொட்ட எதையும் முடிக்காமல் விடமாட்டார்.
வளர்ச்சியின் உச்சத்தை எட்டாமல் திரும்ப மாட்டார். எங்கள் முதல்வர் மக்கள் பணி என்றால் முன்னால் நிற்பவர்! அதனால்தான்- எப்போதும் மக்கள் எங்கள் முதல்வரோடு கைகோர்த்து நிற்கிறார்கள்! கல்லணை என்றால் கரிகாலன் பெயர் இருக்கும் பெரியகோவில் என்றால் இராஜராஜன் பெயர் இருக்கும் நாயக்கர் மஹால் என்றால் திருமலை மன்னன் பெயர் இருக்கும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி என்றால் எங்கள் கலைஞர் பெயர் இருக்கும் சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் திராவிட மாடல் முதல்வரின் பெயர் நிலைத்து நிற்கும்
* நிறைவுரை
“சமத்துவம் என்பது சமமாக நடத்துவது அல்ல! சம வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதுதான்” என்றார் அண்ணா! அவருடைய திராவிடத் தடத்தில் நடைபோடும் எங்கள் முதல்வர் இன்று “இது சாமானியர்களுக்காக நடத்தப்படும் சாமானியர்களின் ஆட்சி” என்று முன்மொழிந்திருக்கிறார்கள். ஃ என்பது தானே தமிழின் ஆயுத எழுத்து ஆனால் ரூ. என்கிற எழுத்தையும் ஆயுதமாக மாற்றி ஒன்றியத்தை அலறவிட்டவர் எங்கள் முதல்வர் உரிமைகள் கேட்பதில் முதல் ஆளாக இருப்பார்! உறையிலிருந்து வெளியே வரும் வாளாக இருப்பார்! இனம் மொழியை சுமக்கின்ற தோளாக இருப்பார்! அடக்கு முறைகளை சம்காரம் செய்வதில் முருகன் கை-வேலாக இருப்பார்! அன்று அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே என்றார் இன்று தன்னுடைய அன்பால் தமிழகத்துப் பிள்ளைகள் அப்பா என்று அழைக்கின்ற தலைவர் ஆகிவிட்டார்.
“எம்மொழியே செம்மொழி!எதற்காக மும்மொழி?” என்று ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்திக்கு வாசல் திறக்க முடியாது எங்கள் வாயையும் அடைக்க முடியாது என்று கர்ஜித்த மொழிக்காவலர்! “எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம்! தேவை ஏற்பட்டால் வாசிக்கிறோம்! அதை திணிக்க நினைப்பது. பிழையாகும்! அது தேன்கூட்டில் கைவைத்த நிலையாகும்”! என்று தமிழ்நாட்டின் தனித்தன்மையை பறைசாற்றியவர் எங்கள் முதல்வர். எங்கள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகம் – இயங்கும் இடத்திற்கு தாளமுத்து – நடராஜன் மாளிகை என்று பெயர். ஆருயிர் தமிழைக் காக்க ஈருயிர் தந்த தியாக தீபங்கள் தாளமுத்து – நடராஜன். தாய் தந்தை கொடுத்த உயிரை தாய்மொழிக்காக தந்து களப்பலி ஆனவர்கள். அன்று தாளமுத்து நடராஜன் மாளிகையை கட்டியவர் கலைஞர்!அவர்களின் நினைவுச் சின்னங்களை மூலக்கொத்தளத்தில் புதுப்பித்து தந்தவர் முதல்வர்.
குழும அலுவலக வளாகத்தில் தாளமுத்து-நடராசனுக்கு சிலை வைக்கிறார் எங்கள் முதல்வர். தியாகங்களை மறக்காத திராவிட மாடல் முதல்வர் வழியில் நடைபோடுகிறது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். பெருநகரத்தில் கட்டடங்களும் உயர வேண்டும் அதை கட்டியவர்களும் உயர வேண்டும். இதுதான் எங்கள் முதல்வர் சொன்ன வளர்ச்சியின் One line. சென்னையின் சாலைகள் பேசும் முதல்வரின் அருமையை! பாலங்கள் பேசும் முதல்வரின் பெருமையை! மழைநீர் வடிகால்கள் பேசும் முதல்வரின் சிறப்பை! மெட்ரோ ரயில்கள் பேசும் முதல்வரின் சிந்தனையை! விழா அரங்குகள் பேசும் முதல்வரின் கலை நோக்கை! கல்வி நிலையங்கள் பேசும் முதல்வரின் தொலைநோக்கை! மருத்துவமனைகள் பேசும் முதல்வரின் கருணையை! பேருந்து நிலையங்கள் பேசும் முதல்வரின் கடமையை! பூங்காக்கள் பேசும் முதல்வரின் அழகுணர்வை!
நூலகங்கள் பேசும் முதல்வரின் அற உணர்வை! ஏரிகள் பேசும் முதல்வரின் ஈரத்தை! விளையாட்டு மைதானங்கள் பேசும் முதல்வரின் வீரத்தை! முதல்வர் படைப்பகங்கள் பேசும் முதல்வரின் ஊக்கத்தை! தோழி விடுதிகள் பேசும் முதல்வரின் அக்கறையை! வெற்றிகள் பேசும் முதல்வரின் உழைப்பை! அந்த உழைப்பு பேசும் முதல்வரின் வெற்றிகளை! சரித்திரங்கள் பேசும் முதல்வரின் சாதனைகளை! இந்த சாதனைகள் தொடர என்றென்றும் தமிழ்நாடு எங்கள் முதல்வரோடு நிற்கும். இந்த மானியக்கோரிக்கையை தயாரிக்கவும், அறிவிக்கின்ற அறிவிப்புகளை செயலாக்கம் தருவதற்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-I உமாநாத் அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்களின் செயலாளர்-II சண்முகம் அவர்களுக்கும்,
நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயசந்திரன் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலாளர் தினேஷ் அவர்களுக்கும், இத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா அவர்களுக்கும், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் பிரபாகர் அவர்களுக்கும், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் அவர்களுக்கும் மற்றும் சென்னைப் வளர்ச்சிக் குழும அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இம்மானியக் கோரிக்கையில் 7 உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களை அளித்திருக்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர்கள் வெட்டுத்தீர்மானத்தை திரும்ப பெற்று மானியக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டு அமைகிறேன். என்று கூறினார்
The post சென்னையில் ரூ.22 கோடியில் 6 அமுதம் அங்காடிகள் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.