புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்தது.
சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியில் அஸ்வின் அங்கம் வகித்தார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரிய அவர் ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
38 வயதானாலும் இன்னும் சில வருடங்கள் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் அதிரடியாக ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் பிளேயிங் 11-ல் இடம் பெறும் அஸ்வினுக்கு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை. அதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் போன்ற வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வினை இந்திய அணி மரியாதையுடன் சரியாக நடத்தவில்லை என்று முன்னாள் வீரர் ஸ்பின்னர் எரப்பள்ளி பிரசன்னா ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினுடைய இடத்தை சுந்தர் போன்ற மற்ற வீரர்கள் நிரப்புவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அஸ்வின் என்ன ஒரு நம்ப முடியாத பவுலராக இருந்தார். அவர் வரலாற்றின் மகத்தான ஸ்பின்னர்களில் ஒருவராக இருப்பார். வெளிநாடுகளுக்கு இந்தியா பயணித்தபோது அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நேரங்களையும் நீங்கள் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணி அவரை மரியாதையுடன் நடத்தியதாக எனக்குத் தெரியவில்லை.
அவர் வெளிநாடுகளிலும் நன்றாகவே செயல்பட்டார். அந்த விஷயம்தான் அஸ்வின் ஓய்வுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். அவரால் நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர் சுழல் பந்து வீச்சை உயரிய இடத்திற்கு எடுத்துச் சென்றார். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியுமா என்பது எனக்கு சந்தேகமாகும்.
ஏனெனில் அஸ்வின் தனித்துவமானவர். அவர் ஓய்வு பெற்றது தற்சமயத்தில் இந்திய அணிக்கு கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் அவர் மிடில் ஓவர்களை நிர்வகித்தவர். அதுவே டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். அதாவது நீங்கள் முதலில் பந்து வீசும்போது முதல் நாளின் உணவு இடைவெளி மற்றும் தேனீர் இடைவெளிக்கு இடையேயான நேரத்தை நிர்வகிப்பது முக்கியம். அதுவே போட்டி எந்தப் பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கும். அங்கேதான் அஸ்வின் அற்புதமாக செயல்பட்டார்.
வாஷிங்டன் சுந்தரை அவமதிப்பதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால் இப்போதுள்ள ஆப் ஸ்பின்னர்கள் பிளாட்டாக, வேகமாக பந்து வீசுகிறார்கள். உண்மையில் பந்தை சுழற்றுவதில்லை. எனவே அஸ்வின் செய்ததை யாரும் செய்ய முடியாது. அவரது இடம் நீண்ட காலம் நிரப்பப்படாமல் இருக்கும்" என்று கூறினார்.