அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்ட தடை தளர்வு: ஒன்றிய அரசு தகவல்

14 hours ago 4

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 6 நாட்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட பாகிஸ்தானியர்கள் 786 பேர் இந்தியாவை விட்டு வெளியேறினர். இந்நிலையில், இந்தியர்களை திருமணம் செய்து, பல்லாண்டுகளாக இங்கு வசிப்பவர்களும் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது.

அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் பலர் அரசிடம் முறையிட்டனர். இதையடுத்து இந்தியாவில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அட்டாரி எல்லை வழியாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும், தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதி அளித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்ட தடை தளர்வு: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article