
அமிர்தசரஸ்,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லையில் நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது எல்லையில் அமைதி திரும்பிய நிலையில், இன்று முதல் தினமும், அட்டாரி,வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. நாளை முதல் கொடியிறக்கும் நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொடியிறக்கும் நிகழ்வின் போது பாகிஸ்தான் படை வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் எனவும், எல்லைக்கதவு திறக்கப்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வை காண 12 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.