சென்னை: அட்சயதிரிதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகைகள் வாங்க ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திரிதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.
இதன்படி இந்தாண்டு அட்சய திரிதியை 29ம் தேதி நேற்று மாலை 5:29 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் இன்று பிற்பகல் 02:12 மணி வரை இருக்கும். உதயதிதியின் அடிப்படையில் இன்று அட்சய திதியை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 5:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் வாங்கினால், வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைப்பது உறுதி கணிக்கப்பட்டுள்ளது. இதன் இன்று முழுவதும் நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தாண்டு அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் அட்சயதிரிதியை அன்று கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அட்வான்ஸ் புக்கிங்கை கடந்த 15 நாட்களுக்கு முன்பே தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. அதாவது, குறைந்தப்பட்சம் 25 சதவீதம் முதல் முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை புக்கிங் செய்யலாம்.
தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 குறைவு, வைர நகைகள் கேரட்டுக்கு ரூ.15,000 வரை குறைவு, வெள்ளி பொருட்கள் கிலோவுக்கு ரூ.3000 வரை குறைவு, தங்க நாணயங்களுக்கு ஜீரோ சதவீதம் சேதாரம். பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றி கொள்ளலாம். முன்பதிவு செய்வர்கள் அட்சதிரியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் அந்த குறைந்த விலையிலும் அல்லது அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்த விலையிலும் தங்க நகைகளை வாங்கி செல்லலாம் என்றும் அறிவித்திருந்தது.
இதனால், ஏராளமானோர் அட்சதிரிதியை அன்று நகை வாங்க புக்கிங் செய்துள்ளனர். அதே நேரத்தில் இன்று வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக நகைக்கடைகள் முன்பாக மனதை கவரும் வகையில் மலர்கள் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் சிகப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சதிரிதியையான இன்று காலையிலேயே(6 மணியளவில்) கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை கடைகள் திறந்திருக்கும்.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தங்க நகைகளில் பல்வேறு புதிய டிசைன்கள் வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நகை விற்பனை என்பது 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் என்னவென்றால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்பதிவு என்பது 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இரவில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வெயில் அதிக அளவில் அடித்து வருகிறது. இதனால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மோர், வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அட்சயதிரிதியை அன்று 25 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகை விற்பனை 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு அட்சதிரிதியை அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ 71,840க்கு விற்னையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
The post அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறப்பு: ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்துள்ளனர் appeared first on Dinakaran.