சென்னை: அட்சயதிருதியை நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பவுன் ரூ.67,400ஐ கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதியில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தை கண்டு வந்தது. அதாவது, கடந்த 27ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.65,880க்கும், 28ம்தேதி ரூ.66,720 என்றும் விற்பனையானது. 29ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,360க்கும், பவுன் ரூ.66,880க்கும் விற்பனையானது. 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை மற்றும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,400க்கும் விற்பனையானது. தங்கம் விலை இதன் மூலம் மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30ம் தேதி அட்சயதிரிதியை வருகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால், அன்றைய தினம் தங்கம் வாங்க வேண்டும் என்று பலரும் பணத்தை சேர்த்து வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது அவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்தின் விலை இனி வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது’’ என்றனர்.
The post அட்சய திருதியை நெருங்கும் நிலையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: பவுன் ரூ.67,400ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.