
சென்னை,
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, பவுன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.
அதாவது, கடந்த 23-ந்தேதி, பவுன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து வந்து சற்று ஆறுதலை கொடுத்த தங்கம், மீண்டும் ஏற ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம்.
அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் அம்சமான தங்கமும், வெள்ளியும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. குரு ஓரை, சுக்கிர ஓரை நேரங்களில் தங்கநகைகளை வாங்கலாம். அட்சயதிருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் அட்சயதிருதியை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமால் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.