சென்னை: “சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 50 கி.மீ. நீளத்துக்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாறு மண்டலத்தில் 175 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் இரண்டாம் கட்டமாக 166 கி.மீ. வரை வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.9) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.