திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் மகன் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ்-செல்வி ஆகியோரின் மகன் செங்குட்டுவனுக்கும், அச்சரப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ மதிவாணன் – கீதா ஆகியோரின் மகள் பிரித்திகாவுக்கும் நேற்று காலை திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களுக்கு மங்கல நாணை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: இன்றைய தினம் அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடைபெறும் மணமகன் செங்குட்டுவன், கலைஞரால் பெயர் சூட்டப்பட்டவர். செங்குட்டுவனின் சகோதரிக்கும் என் தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமை அளிக்கக்கூடியது. மணமகனின் தந்தை தேவராஜ், திமுகவில் கீழ் மட்டத்தில் பொறுப்பு வகித்து தற்போது பேரூராட்சி தலைவர், நகர செயலாளர் பொறுப்புகளுக்கு வந்து கட்சி பணியும், மக்கள் பணியும் செய்து வருகிறார். கலைஞர் சிறை சென்றபோது அதே சிறையில் உடனிருந்த பெருமையும் தேவராஜிக்கு உண்டு. திமுகவிற்காக 5 முறை சிறையில் அடைக்கப்பட்டவர்.
அடுத்த முறையும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது. இன்னும் 8 மாதங்கள் நாம் உழைத்து மக்களிடம் திமுக அரசின் திட்டங்களை எடுத்து சொன்னால் போதும், வெற்றிபெறுவது உறுதி. மணமக்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும். மணமக்கள் நல்ல நண்பர்களாக விட்டுக் கொடுத்து வாழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் எம்பி விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் வீ.தமிழ்மணி, மீ.ஆ.வைத்தியலிங்கம், ஆர்.டி.அரசு, டி.மூர்த்தி, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சுந்தர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணை தலைவர் வன்னி அரசு, காஞ்சிபுரம் மாவட்டக்குழு தலைவர் படப்பை மனோகரன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
The post அடுத்த முறையும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது: திருப்போரூர் பேரூராட்சி தலைவர் இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.