அடிலெய்டு டெஸ்ட்; பேட்டிங்கில் ரோகித், ராகுல் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - புஜாரா கருத்து

7 months ago 23

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் பகல் - இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இடம் பெறாத ரோகித் சர்மா மற்றும் சுப்மன் இருவரும் 2வது போட்டியில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. இதன் காரணமாக கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அடிலெய்டு போட்டியில் 5வது அல்லது 6வது இடத்தில் களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ரோகித் சர்மா, சுப்மன் கில் வந்தாலும் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சில காரணங்களுக்காக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை நாம் துவக்க வீரர்களாகவே தொடரலாம். ரோகித் சர்மா வந்தால் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். சுப்மன் கில் 5வது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும்.

ஒருவேளை ரோகித் துவக்க வீரராக விளையாட விரும்பினால் ராகுல் 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதை தாண்டி அவர் பேட்டிங் செய்யக்கூடாது. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடுவது அவருடைய ஆட்டத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அதே போல சுப்மன் கில் 5வது இடத்தில் விளையாடுவதற்கு சரியாக இருப்பார். ஏனெனில் ஆரம்பத்திலேயே நாம் சில விக்கெட்டுகளை இழக்கும் போது அவரால் புதிய பந்தை எதிர்கொண்டு விளையாட முடியும்.

அதே சமயம் 25 அல்லது 30 ஓவர்கள் முடிந்த பின் வந்தாலும் அவர் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யக்கூடிய திறமை கொண்டவர். அது லோயர் ஆர்டரில் ரன்கள் குவிக்க உதவக்கூடும். பந்து வீச்சில் மெதுவாக துவங்கினாலும் போட்டி முடிவதற்குள் முன்னேறி அவர் சில முக்கிய விக்கெட்டுகளை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article