
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. இதில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், இப்படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது.
'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர படங்களில் அருண் விஜய் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.