![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37876233-9.webp)
சென்னை,
நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பல பிரச்சினைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
அஜித்குமாரும், திரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அஜர்பைஜான் நாட்டில் வசித்து வருகிறார்கள். இதற்கிடையில் மனக்கசப்பு காரணமாக அஜித்குமாரை பிரிய திரிஷா முடிவு செய்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும், அதேவேளை கடைசியாக ஒரு பயணம் மேற்கொள்ள அஜித்குமார் முடிவு செய்கிறார்.
அப்படி ஒரு பயணத்தின் போது கார் பழுதாக நடுவழியில் அஜித்குமாரும், திரிஷாவும் தவிக்கிறார்கள். ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுகிறது. அப்போது அர்ஜுன் - ரெஜினா தம்பதி உதவுகிறார்கள். இதற்கிடையில் திரிஷா திடீரென மாயமாகி போகிறார். மாயமாக்கிப் போன மனைவியை கண்டுபிடிக்க அஜித்குமார் நாலா பக்கமும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். அப்போது பல பெண்கள் இதுபோல காணாமல் போனது தெரிய வருகிறது.
அஜர் பைஜான் நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள் காணாமல் போவது ஏன்? திரிஷாவை, அஜித் குமார் கண்டுபிடித்தாரா? என்பதே பரபரப்பான இப்படத்தின் மீதி கதை.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37876675-9a.webp)
அஜித் குமார் ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி இருக்கிறார். மனைவியை தொலைத்து விட்டு தேடும் காட்சிகளில் பரிதாபம் அள்ளுகிறார். இளமையான தோற்றத்தில் அவர் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது. வசீகரமான நடிப்பால் திரிஷா கவர்கிறார். அஜித்திடம் காதலை சொல்லும் காட்சியில் கவிதை.
அர்ஜுனும், ரெஜினாவும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஆரவ் உள்ளிட்டோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. பரபரப்பான, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் பலம். அஜித்குமார் - திரிஷாவின் பிரிதல் முடிவுக்கு காரணத்தை வலுவாக சொல்லி இருக்கலாம்.
அஜித்குமார் என்ற கூர்மையான ஆயுதத்தை வலுவாக பட்டை தீட்டி, விறுவிறுப்பு நிறைந்த காட்சிகளாக படத்தைக் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37876599-9b.webp)