
சென்னை,
அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இது ஒருபுறம் இருக்கையில், அஜித்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பரபரப்பான விஷயமாக இருந்து வருகிறது. அவரது அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற பெரிய கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாகவே, பல முக்கிய இயக்குனர்களின் பெயர்கள் வதந்திகளாக பரவி வருகின்றன. இந்நிலையில், சுழல் 2 தொடரை இயக்கிய புஷ்கர்-காயத்ரி, அஜித்துடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புஷ்கர் - காயத்ரியிடம் தொகுப்பாளர் "அஜித்தின் அடுத்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அவர்கள்,
"சினிமாத்துறையில் உள்ள அனைவரும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், மிகவும் மகிழ்ச்சியடைவோம். உங்கள் அனைவரையும்போலவே, நாங்களும் அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம்" என்று புன்னகையுடன் பதிலளித்தனர்.